புதன், 25 பிப்ரவரி, 2015

அமெரிக்கான்னா கொம்பாமுளைச்சிருக்கு....

நம்ம ஊருல ......

டேய் வாடா தம்பி... காவல் நிலையம் போய் ஒரு புகார் கொடுத்திட்டு வந்திரலாம்.
அய்யா ஏட்டைய்யா... எவனோ வீட்டுக்குள்ள புகுந்து நம்ம வீடியோ கேமரா -வை  திருடிட்டு போய்ட்டான்.

அப்படியா  தம்பி...  அது என்ன விலை  இருக்கும். 

அது ஐம்பதாயிரம்  ரூபாய் மதிப்புங்கய்யா. தம்பி இப்போ வெளி நாட்டில் இருந்து வர்றதுக்கு  முந்தின நாள் தான் வாங்கி இருக்காருங்க.

அப்படியா. அட பாவமே... சப் - இன்ஸ்பெக்டர்  வரட்டும். கொஞ்சம்  காத்திருங்க..

ரெண்டு மணி நேரம் ஆச்சு..

ஏட்டையா, சப்-இன்ஸ்பெக்டர் எப்ப வருவாருங்க ...

அது  எப்பன்னு  சொல்ல முடியாதுப்பா .. நான் என்ன ஜோசியமா பாக்குறேன் ..
கம்ப்ளைன்ட் எழுத பேப்பர் இல்ல ... போய் ரெண்டு குயர்  பேப்பரும் நாலு ஹீரோ பேனாவும் வாங்கிட்டு வாங்க...

சப்-இன்ஸ்பெக்டர்  வந்தார்...  மூணு மணி நேரம்  கழிச்சு..

தம்பி ஒரு ஐயாயிரம் ருபாய் செலவாகும் தேடறதுக்கு  ... ஏட்டையா கிட்ட பணத்த குடுத்திட்டு போங்க ...மாடல் நம்பர் , சீரியல் நம்பர் , ஜாதகம்  எல்லாம் குடுத்திட்டு போங்க..

ஆறு மாதம் கழித்து ...

தம்பி, உங்க பொருள் கிடைச்சிருச்சு.... கோர்ட் க்கு போய் ஜட்ஜ் அய்யா கிட்ட கேஸ் வந்ததும் வாங்கிரலாம்.. கோர்ட்டுக்கு  அடிக்கடி  போய் வரணும்..ஒரு பத்தாயிரம்  செலவாகும்....

ஒரு வருஷம் கழித்து ....

தம்பி அது உங்க பொருள் இல்லப்பா... வேற மாடல்.. இன்னும்  ஒரு ஐயாயிரம் ருபாய்  செலவாகும் ... வெளி நாட்டில தான வேலை .. ரொம்ப அதிகம் கேக்கலை உங்க கிட்ட ....

அட போங்க சார் .. அந்த  பொருளே  இப்ப பத்தாயிரத்துக்கு  கெடைக்குது (மனசுக்குள்ள....போடாங்கொய்யால .. நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்)

அமெரிக்காவில ...

போலீஸ் ஸ்டேஷன் கு  போன் ....
அய்யா.. நேத்து ராத்திரி என்னோட  கார் கண்ணாடிய ஒடச்சு போன், கிரெடிட் கார்டுகள், GPS கருவி எல்லாம் யாரோ எடுத்திட்டு போய்ட்டாங்கய்யா ...

அப்படியா.. ஐயோ பாவமே .. உங்க முகவரி சொல்லுங்க .. வீட்டுக்கு ஒரு அதிகாரி வருவார் ... இன்னும்  ஒரு மணி நேரத்துக்குள்ள....

பதினஞ்சு நிமிஷதுக்குள்ள... 

வீட்டுக்கு அதிகாரி வந்தார்..

சார்... இந்த  பேப்பர்ல என்ன  நடந்துச்சு ...என்னென்ன  பொருள் தொலைஞ்சு போச்சு.. என்ன விலை இருக்கும்னு எழுதி கொடுங்க.. கிரிடிட் கார்டு நம்பர் எல்லாம் எழுதி குடுங்க.. உடனே எல்லா கார்டு-ஐயும் கேன்சல்  பண்ணிருங்க..

ரெண்டு நாள் கழிச்சு ...

போலீஸ் அதிகாரியிடம் இருந்து போன் கால் ...
கண்காணிப்பு  கருவில உங்க கிரெடிட் கார்டு உபயோகித்த நபர் முகம் பதிவாகி உள்ளது.. விரைவில்  கண்டு பிடித்து விடுவோம் என்று  நம்புகிறோம்.

மூன்று  வாரம் கழிச்சு ...

திருடனை  பிடித்து விட்டோம் ... உங்கள் போன் கிடைத்து விட்டது .. இன்று மதியம்  நான் உங்கள் வீட்டிற்க்கு வந்து கொடுத்து விடுகிறேன் ..
வந்தார் ..கொடுத்து விட்டு போனார்..
கிரெடிட் கார்டு, GPS  கருவிகளை உங்களுக்கு வசதிப்படும் பொழுது வந்து  வாங்கிக்கொள்ளுங்கள் ..
கையெழுத்து வாங்கிக்கொண்டு பத்து நிமிடத்தில் கொடுத்து விட்டார்கள்

சுய முகவரியிட்ட கவர் வீட்டுக்கு அனுப்பி அதில் வாக்கு மூலம் வாங்கி விட்டு, கேஸ்  நடத்தி , திருடனை நான்கே வாரங்களில் களி திங்க அனுப்பி விட்டார்கள்..

இனி இரண்டு வருடங்கள் அரசு மரியாதை  தான்  அந்த திருடனுக்கு...


டிஸ்கி: 

இது நம் நாட்டை குறை சொல்ல எழுதவில்லை .. உண்மை அனுபவம் ...

என்று  நடக்கும் இது என் தாய் நாட்டில் ....ஒரு ஆதங்கமே ...


படிச்சிட்டு பிடிச்சிருந்தா  எதாவது சொல்லிட்டுபோகனும் .. ஆமா .. இல்லன்னா... சாமி உங்க கண்ண குத்திரும் ... சொல்லிப்பிட்டேன் ...அம்புட்டுதான்...




கொடி பறக்குது.. ஆனா....

அந்த காலத்தில(சரி  சரி.. இன்னும் நெறைய  இருக்கு..கதைக்கு வருவோம் ) என்னுடைய  ஒரு  பள்ளி பருவ நினைவை  தான் முதல் பதிவாக உங்களுடன்  பகிர்ந்து கொல்ல போகிறேன். நான் கோவில்பட்டி நாடார் மேல் நிலை பள்ளியில் படிக்கும் போது பள்ளி மாணவர் உப தலைவன் தேர்வுக்கு போட்டி  போட்டு,  ஓடி ஓடி வாக்குகள் சேகரிச்சு, ஒருவழியா அபார வெற்றியும்  பெற்று விட்டேன். (அப்பெல்லாம்  சத்தியமா கள்ள ஒட்டு கெடயாது). ஆனா என்ன அரசு இயந்திரத்தை தான் கொஞ்சம் முறை கேடாக பயன்படுத்த வேண்டியதா போச்சு . எங்க அப்பாவோட கால்ல  விழுந்து அவரோட நண்பரின் அச்சகத்தில்  போய்  ஓசில நோட்டீஸ் அச்சடித்து விநியோகம் செஞ்சேன். கதைக்கு வருவோமே. 

முதல் நாள்  காலை பள்ளி இறை வணக்கம் தொடங்க  தயார்.. காலைல எல்லாருக்கும் லட்டு  கொடுத்து வெற்றியை  கொண்டாடியாச்சு.அய்யா எல்லாருக்கும் முன்னால பெருமையா நின்னு உறுதிமொழி  எல்லாம் எடுத்து முடிச்சேன் . தலைமை ஆசிரியர் இருதயராஜ்  சார்  நம்மள  இவன் வல்லவன் நல்லவன்னு  வாழ்த்தி பேசி, இனிமேல் இந்த வருஷாம் பூரா இவன் தான் இறை வணக்கத்துக்கு   தலைமை தாங்குவான்னு  சொல்லி, சரி  போய்  கொடி ஏத்துன்னார். அய்யா பெருமையா, பய பக்தியா, கொடிக்கம்பத்தில, கயிற  இழுத்தது தான் தெரியும். ங்கொயின்னு ஒரு சத்தம் .... என் கன்னம் பழுத்திருச்சு...கொடி  தலை கீழா  கட்டி வெச்சிருக்கு புள்ள... இறை வணக்கம் முடிஞ்சதும், சிவந்த கன்னமும் .. அழுத மூஞ்சியுமா .. வீட்டுக்கு ஒரே ஒட்டம்..
அப்பா.. நான் இந்த பதவிய ராஜினாமா செய்யணும் ...இனிமேல இந்த பள்ளி கூடத்தில மனுஷன் படிப்பானா..நான் போக மாட்டேன்னு ஒரே அழுகை ...

மூணு  நாள் பள்ளி புறக்கணிப்புக்கு  பிறகு  எங்க அப்பா  என்னை சமாதான படுத்தி, கொடியின் பெருமை எல்லாம் சொல்லி  புரிய  வெச்சார். எங்க அப்பா போய் தலைமை ஆசிரியர் கிட்ட பேசி  ஒரு வழியா  என்னை வெள்ளை  கொடி காட்ட வெச்சார். வாத்தியார் ஏண்டா மூணு நாள் வரலைன்னு தட்டி  கொடுத்து, பாசமா ஒரு மறு தேர்தலை நடக்க விடாம பண்ணிட்டார். 

டிஸ்கி : இது  சத்தியமா ஒரு  அரசியல் சார்பற்ற பதிவு. 

கம்பெனிக்கும்  திரு.மணிஷ் சிசோடியா வுக்கும்  எந்த தொடர்பும் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவு படுத்தி கொள்கிறோம்.


                                                                       ........இன்னும் நெறய இருக்கு (கொ)சொல்ல